'தனியார் பள்ளிகள் விளம்பரம் வெளியிட தடையில்லை
'பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட பள்ளிகளுக்கு தடையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இவை, இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு, மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும் அனுப்பப்படுகிறது. தேர்வு முடிவில், மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள்; பள்ளிஅளவில் முன் வரிசை பட்டியலில் இடம் பிடித்தவர்களின் பெயர், புகைப்பட விபரங்கள் வெளியிடப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ரேங்கிங் முறை வைத்து, பள்ளிகள், அமைப்புகள், பத்திரிகைகள், குறிப்பிட்ட மாணவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக் கூடாது என, பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது.இந்நிலையில், பள்ளிகள் தரப்பில் விளம்பரங்கள் செய்யலாமா என, அதன் நிர்வாகத்தினர், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பள்ளிக்கல்வி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்வு முடிவுகள் குறித்து, விளம்பரங்கள் வெளியிட பள்ளிகளுக்கு, எந்த தடையும் இல்லை. அதேநேரம், எந்தவொரு மாணவ, மாணவியின் மதிப்பெண்ணை குறிப்பிட்டு, அவர்களின் பெயர், புகைப்படம் விளம்பரத்தில் இடம் பெறக்கூடாது. 'டாப்பர்' என, 'ரேங்கிங்' செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் மத்தியில், ஏற்றத்தாழ்வு, மன அழுத்தம், விரக்தி ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களை மதிப்பெண் ரீதியாக ஒப்பிடுவதும், தடுக்கப்பட்டுஉள்ளது.ஒவ்வொரு பள்ளியும், தங்கள் பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்று முறை, ஆய்வக, நுாலக, தொழில்நுட்ப வசதிகள், தேர்வு முடிவில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றை வெளியிட தடையில்லை.எத்தனை மாணவர்கள்,அதிக மதிப்பெண்; சென்டம் பெற்றனர்; ஒவ்வொரு பாடத்தில் மதிப்பெண் அளவில் சாதனை படைத்த மாணவர்கள் எத்தனை பேர் என்பதை, மாணவ, மாணவியரின் பெயர், புகைப்படம் இன்றி, எண்ணிக்கையாக குறிப்பிடலாம். பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் குழு போன்ற புகைப்படங்கள், பெயர் விபரங்களை வெளியிட எந்த தடையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.