கேரள மாநிலத்தைச் சேர்ந்த 20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணைய இணைப்பை வழங்கும் நடவடிக்கையில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.
20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணைய வசதி வழங்கும் இலக்கை அடைவதற்குக் கூட்டு நிறுவனம் ஒன்று அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் கேரள அரசால் வழங்கப்பட்டுள்ளது. மே 9ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கேரள அரசின் ஃபைபர் நெட்வொர்க் இணைப்புத் திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்தும். இத்திட்டத்தில் கேரள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இணைய வசதி வழங்கப்படுகிறது.
கேரள மாநிலத் தகவல் தொழில்நுட்ப உள்கட்டுமான நிறுவனம், கேரள மாநில மின் வாரியம் ஆகியவை இணைந்து உருவாக்கப்படும் அப்புதிய கூட்டு நிறுவனத்துக்கான புரிந்துணர்வுக் கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கும் அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொபைல் போன்கள் வாயிலாக அரசின் இதர சேவைகளைப் பெறுவதற்கான வசதிகளும், இடையூறற்ற இணையச் சேவை பெறுவதற்கான வசதிகளும் இத்திட்டத்தின் இலக்காக இருப்பதாகக் கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.