புதுச்சேரி பல்கலையில் எம்.எஸ்.சி., -எம்.பி.ஏ.,- ஆங்கிலத்திற்கு கடும் போட்டி


புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்விற்கு நாடு முழுவதிலும் இருந்து 43 ஆயிரத்து
709 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எம்.பி.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் சேர
கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்லைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.காம்., பி.எச்டி., உள்பட 94 வகையான படிப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 3,115 மாணவர் சேர்க்கை காலியிடங்கள் உள்ளன.


இந்த இடங்களுக்கான ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மார்ச் 21ம் தேதி முதல், ஆன்-லைனில் வினியோகிக்கப்பட்டது.

கடந்த 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கடந்த சில நாட்களாக விண்ணப்பங்கள் பரிசீலனை நடந்தது.

இறுதியில் நாடு முழுவதிலும் இருந்து, பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு படிப்புகளுக்கு, 43 ஆயிரத்து 709 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கடந்தாண்டை காட்டிலும் 10,947 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

*ஒருங்கிணைந்த படிப்புக்கு மவுசு*

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக அறிமுகப்படுத்த எம்.சி.எஸ்.சி., படிப்புகள் (அப்ளையடு ஜீயோலஜி, வேதியியல், இயற்பியல்) ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இப்படிப்பில் சேர 4,334 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.


எம்.எஸ்சி.,படிக்க விருப்பம் இல்லையெனில், பி.எஸ்சி., டிகிரியோடு வெளியேறலாம் என்பதால் இப்படிப்புகளுக்கு இந்தாண்டு மவுசு ஏற்பட்டுள்ளது.

*எம்.பி.ஏ., டாப்*

கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் உள்ள நான்கு எம்.பி.ஏ..படிப்புகளுக்கு தனித்தனியே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது.

இந்தாண்டு இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த ஒரே விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.

இதன் காரணமாக எம்.பி.ஏ.,படிப்புகளுக்கு, இந்தாண்டு 3,695 விண்ணப்பம் குவிந்துள்ளது.


*ஆராய்ச்சி படிப்புகளுக்கு போட்டி*


இதேபோல் இந்தாண்டு எம்.எஸ்சி., எம்.சி.ஏ.,
ஆராய்ச்சி படிப்பில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், பையோ கெமிஸ்ட்ரி மற்றும் மாலிகுலர் பையாலஜி, புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், அப்ளையடு ஜீயோலஜி உள்ளிட்ட ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

*மவுசு குறையாத ஆங்கிலம்*

அரசு, தனியார் நிறுவனங்களில் ஆங்கில மொழியில் திறன் பெற்றவர்களே வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

பிற வேலை வாய்ப்புள்ள படிப்புகளை படித்திருந்தாலும் ஆங்கில தகவல் தொடர்பில் சிறந்து விளங்குபவருக்கே, முன்னுரிமை வழங்கப்படுகிறது.


இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்.ஏ., ஆங்கிலம் படிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு ஆங்கில்ம் படிக்க 2,036 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

*முழுவீச்சு*

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில், நாடு முழுவதும், 34 மையங்களில் நடக்கிறது.
தேர்வு மையங்களை இறுதி செய்யும் பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம், முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.