2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழகத்தில் தடை - முதல்வர்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (செவ்வாய் கிழமை) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தறுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.