புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150, காரைக்கால் ஜப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
ஜிப்மர் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வினை எழுதினர். புதுவையில் 1,795 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜிப்மர் இணையதளத்தில் www.jipmer.puducherry.gov.in வெளியிடப்பட்டது.
அகில இந்திய ஒதுக்கீட்டில், மாணவர் அன்கடலா அனிரூத் பாபு 99.9987799 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் அகில்தம்பி 99.9986570 மதிப்பெண் எடுத்து 2-ம் இடமும், பிரிராக்திரிபாதி 99.9975598 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது. புதுவை பொதுபிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர் களுக்கு 28-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.
ஜிப்மர் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய மதிப்பெண் பற்றிய விபரங்களை www.jipmer.puducherry.gov.in அல்லது www.jipmer.edu.inஎன்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 11 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.