மாதிரிப்பள்ளிகளில் தோட்டக்காரர் வேலைக்கு M.SC., MBA. பட்டதாரிகள் போட்டி : கல்வியாளர்கள் அதிர்ச்சி


சேலம் மாவட்ட மாதிரிப்பள்ளிகளில் உள்ள 7 தோட்டக்காரர் பணிக்கு எம்எஸ்சி, எம்பிஏ பட்டதாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 இரண்டாம் கட்ட மாதிரிப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் தலா ஒரு இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலாளி மற்றும் தோட்டக்காரர் என 7 பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 9 பள்ளிகளிலும் உள்ள 63 காலிப்பணியிடங்களுக்கு, தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

மொத்தமுள்ள 7 இளநிலை உதவியாளர் பணிக்கு 818 பேரும், ஆய்வக உதவியாளர் பணிக்கு 545 பேரும், நூலகர் பணிக்கு 186 பேரும், அலுவலக உதவியாளர் பணிக்கு 591 பேரும், துப்புரவு பணியாளர் பணிக்கு 126 பேர், இரவு காவலாளி பணிக்கு 106 பேர் மற்றும் தோட்டக்காரர் பணிக்கு 82 பேர் என, 63 பணியிடத்திற்கு 2,454 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 10ம் வகுப்பு தகுதியாக உள்ள இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் 12ம் வகுப்பு தகுதியாக உள்ள நூலகர் பணிக்கு 6,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு, துப்புரவு பணியாளர், காவலாளி மற்றும் தோட்டக்காரர் ஆகிய பணிகளுக்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பித்தால் போதுமானது. இவர்களுக்கு 4,500 ஊதியமாகும். ஆனால் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 90 சதவீதம் பேர் பட்டதாரிகளே உள்ளனர். பிஎச்டி, எம்பில் போன்ற ஆராய்ச்சி முடித்தவர்களும், முதுகலை படித்தவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, 4,500 ஊதியமான தோட்டக்காரர் பணிக்கு, எம்எஸ்சி, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். குறைந்த சம்பளம், தற்காலிக பணியாக இருந்தாலும், அரசு பள்ளிகளில் வேலை என்பதாலும், வேலைவாய்ப்பு பற்றாக்குறை என்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

முதல்நாள் நேர்காணலில் குவிந்த இளைஞர்கள்

மாதிரிப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேர்காணல் நேற்று நடந்தது. சூரமங்கலம் புனித சூசையப்பர் மகளிர் பள்ளியில் நடந்த நேர்காணலுக்கு சேலம் மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். இதற்கென அமைக்கப்பட்ட ஒரு குழுவில், ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் என 10 குழுக்களில், 30 பேர் கலந்து கொண்டு, விண்ணப்பத்தார்களின் சான்றிதழ்கள் சரிபார்த்து, நேர்காணலை நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இன்று (9ம் தேதி) காலை ஆய்வக உதவியாளர் பணிக்கும், மதியம் நூலகர் பணிக்கும் நேர்காணல் நடக்கிறது. தொடர்ந்து, 11ம் தேதி காலை அலுவலக உதவியாளர் பணிக்கும், அன்று மதியம் துப்புரவு பணியாளர், இரவு காவலாளி மற்றும் தோட்டக்காரர் பணிக்கு நேர்காணல் நடக்கிறது