மாணவர் சேர்க்கை நடத்துவதா? பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை : 'ஊரடங்கு காலத்தில், அரசு அறிவிக்காத நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டால், தொற்றுநோய் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில், சில அடிப்படை பணிகளை மட்டும் மேற்கொள்ள, அரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி கொள்ளலாம். அதேபோல, தேவையான சில பணிகளை, ஆன்லைனில் மேற்கொள்ளலாம். அதற்கு மாறாக, பள்ளிகளை திறந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை நடத்துதல், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை, சில பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. பெற்றோரை பள்ளிக்கு வரவைத்து, அவர்களிடம் விண்ணப்பங்களையும் பெறுகின்றன.அதேபோல, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துகின்றன. இதுகுறித்து, புகார்கள் வந்த பள்ளிகள், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், 'கொரோனா ஊரடங்கு காலத்தில், அரசு அறிவிக்காத பணிகளை, பள்ளிகள் மேற்கொள்ளக்கூடாது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பது கூடாது. 'மீறும் பள்ளிகள் மீது, தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

0 Response to "மாணவர் சேர்க்கை நடத்துவதா? பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை"

Post a Comment