சமையலால் ஏற்படும் பாதிப்புகள் என்பவை நாம் சாப்பிடும் உணவால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆனால் நாம் எதை சுவாசிக்கிறோம் என்பதாலும் அது அமையும். முதலில், வளரும் நாடுகளில் சமையல் அடுப்புகளும் நோய்களுக்கு பெரிய காரணியாக உள்ளன. மரக்கட்டை, தாவரக் கழிவுகள் மற்றும் கரி போன்ற திட எரிபொருள் பயன்படுத்தினால், அறைக்குள் புகை அதிகமாகும். இதன் காரணமாக ஆண்டுதோறும் 3.8 மில்லியன் பேர் முன்கூட்டியே (மரண வயதுக்கு முன்னதாகவே) மரணத்தைத் தழுவுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் உணவில் நாம் பயன்படுத்தும் சில உட்பொருட்களும் அறைக்குள் காற்று மாசு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்.

சமைக்கும் எண்ணெயில் இருந்து உருவாகும் புகை நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆதாரம் இருப்பதாக 2017ஆம் ஆண்டில் Journal of Cancer Research and Clinical Oncology-யில் வெளியான ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் 9,411 புற்றுநோயாளிகளைக் கொண்ட 23 ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு, சரியான காற்றோட்டம் இல்லாமல் வீட்டு சமையலறையில் சமைப்பது மட்டுமின்றி, வெவ்வேறு வகையான சமையல் முறைகளும் வெவ்வேறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அதில் கண்டறியப்பட்டது. உதாரணமாக, பொரிப்பதைக் காட்டிலும், வறுப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்து அதிகம் என அதில் தெரிய வந்தது.

தாய்வானில், சமையல் எண்ணெயில் இருந்து உருவாகும் புகையில், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்ட ஆல்டிஹைட் வேதிப்பொருள் உருவாகிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கர்ப்ப காலத்தில் சமையல் எண்ணெய் புகைக்கு ஆட்பட நேரிட்டால், பிறக்கும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும், பிரசவத்தின் போது குழந்தையின் எடை குறையலாம் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக மற்ற ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில், வெவ்வேறு சமையல் நடைமுறைகள் காரணமாக, மனிதனுக்கு நஞ்சாக இருக்கும் பல கூட்டுப் பொருட்களில் ஒன்றான ஆல்டிஹைட்கள் உருவாதல் பற்றி தாய்வானில் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பீடு செய்தனர். சூரியகாந்தி எண்ணெய் புகைகள் மற்றும் பொரித்தல் வகைகள் மற்றும் தோசைக்கல்லில் வறுத்தல் போன்றவற்றால், ஆல்டிஹைட்கள் உற்பத்திக்கு அதிக ஆபத்து வாய்ப்பு உள்ளது என்றும், பாமாயில் அல்லது ரேப்சீட் எண்ணெய், அதேபோல வறுத்தல் போன்ற மென்மையான சமையல் முறைகளால் அதிக அளவிலான, அல்லது ஊறு விளைவிப்பவை என நாம் நினைத்த அளவுக்கான வேதிப் பொருட்களை உருவாக்குவதில்லை என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.