கொரோனா 3ஆவது அலை ஏற்பட்டாலும் அதனால் குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகத்தீவிரமாக உள்ளது. தொற்று உச்சம் அடைந்த மாநிலங்களில் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தினசரி பாதிப்பு குறைகிறது.
இந்தியாவின் மொத்த தினசரி பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 2.2 லட்சமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் தினசரி பாதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது. சென்னையில் பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின்போது முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 3ஆவது அலை உருவானால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியானது.
ஆனால் அந்த தகவல் உண்மை அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என குழந்தைகள் நல மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
0 Response to " கொரோனா 3ஆவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை!!"
Post a Comment