''கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 6 - 8 மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது," என, மூத்த ஆராய்ச்சியாளர் வித்யாசாகர் எச்சரித்துள்ளார்.கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, குறைந்து வருகிறது.
இதற்கிடையே, வைரஸ் பரவல் குறித்து கணிக்க, ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. 'சூத்ரா' எனப்படும் இந்த குழு, கணிதம் அடிப்படையில், வைரசின் வீரியத்தை கணித்து வருகிறது.
அதன் ஆய்வு முடிவுகள், மத்திய அரசிடம் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த ஆராய்ச்சியாளரும், ஐதரா பாத் ஐ.ஐ.டி., நிறுவன பேராசிரியருமான வித்யாசாகர் நேற்று கூறியதாவது:
கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து வருகிறது.
இந்த நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் உடலில் உள்ள, 'ஆன்டிபாடி' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் அழிந்து போகலாம்.
அப்படி அழிந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போக வாய்ப்புள்ளது. இதை கருத்தில் வைத்து, கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
மேலும், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவற்றை செய்யாவிட்டால், அடுத்த, 6 - 8 மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனினும், எங்கள் சூத்ரா குழு, இந்த மூன்றாம் அலை குறித்து, இதுவரை கணிக்கவில்லை. அதை கணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Response to "மூன்றாம் அலைக்கு வாய்ப்பு: ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை"
Post a Comment