பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலையுடன் பட்டப்படிப்பு: தாட்கோ ஏற்பாடு

தாட்கோ மற்றும் ஹெச்சிஎல் நிறுவனம் இணைந்து, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு தாட்கோ மூலம் ஹெச்சிஎல் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதல் ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

முதல் 6 மாதங்களுக்கு இணைய வழி மூலமாக பயிற்சி நடத்தப்படும். பயிற்சிக்கு தேவையான மடிகணினி ஹெச்சிஎல் நிறுவனமே வழங்கும். அடுத்த ஆறு மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள ஹெச்சிஎல் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ஆறாம் மாதம் முதல் மாணக்கர்களுக்கு மேற்படி நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

2ம் வருடத்தில் மாணாக்கர்களுக்கு மூன்று விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும். இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

0 Response to "பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலையுடன் பட்டப்படிப்பு: தாட்கோ ஏற்பாடு"

Post a Comment