இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வெகுஜன மக்களை மிக அதிகமாக பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் இருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ள அனைவருக்கும் வாழ்க்கை அபாயகரமாக மாறி உள்ளது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ரத்தசர்க்கரை கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் எந்த தொந்தரவும் இன்றி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழலாம். ஆனால், சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய துணை நோய்கள் உருவாகும் என்பதை மறந்து விடக்கூடாது.
மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை உட்கொள்வதுடன், நமது வாழ்வியலில் அன்றாடம் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே சர்க்கரையை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். தினசரி உடற்பயிற்சி செய்வதுடன், ஆரோக்கியமான உணவு முறையை கையாண்டால் சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வரும். நம் உணவில் 5 விதமான விதைகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.
வெந்தய விதைகள் : நம் அஞ்சறைப்பெட்டியில் தவறாமல் இடம்பெற்று இருக்கும் இந்த பொருளில் சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய கிளாக்டோமான் என்னும் பொருள் உள்ளது. அது குளுக்கோஸ் செரிமானத்தை தாமதப்படுத்தி, உடல் அதனை உறிஞ்சும் வேகத்தையும் தாமதப்படுத்துகிறது. இதன் எதிரொலியாக ரத்த சர்க்கரை குறைவதுடன், குளுக்கோஸ் அளவை உடல் சகித்துக் கொள்ளும் தன்மை மேம்படுகிறது. நார்ச்சத்து மிகுந்த வெந்தய விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க உதவுகிறது.
ஓம விதைகள் : வயிறு உப்புசம் ஏற்பட்டால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருகின்ற பாட்டி வைத்தியம் இந்த ஓம தண்ணீர்தான். செரிமான பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மருத்துவ தன்மைகளும் இதில் உள்ளன. இதுவும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருளாகும். நமது உடலில் மெட்டபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சப்ஜா விதைகள் : பார்ப்பதற்கு மிக, மிக சிறிய அளவில் இருக்கின்ற சப்ஜா விதைகளில் நார்ச்சத்து மிகுதியாக கொட்டி கிடக்கிறது. பொதுவாக கோடைகாலத்தில் நாம் அருந்தும் குளிர்பானங்களில் இந்த சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்கிறோம். இதன் மூலமாக பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. முதலாவதாக ரத்த சர்க்கரை குறைய தொடங்குகிறது மற்றும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இந்த சப்ஜா விதைகளில் இருக்கிறது.
ஆளி விதைகள் : இதுவும் சப்ஜா விதைகளை போன்றே பல அற்புதங்களை செய்யக் கூடியது. கரையாத தன்மை கொண்ட நார்ச்சத்து இதில் மிகுதியாக உள்ளது. நமது செரிமான நலன் மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகிய இரண்டையும் சீராக வைத்திருக்கக் கூடியது. ஆளி விதைகளில் உள்ள லிக்னோன் என்ற பொருள் காரணமாக டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் ஆகிய இரண்டுக்கும் இது தீர்வு தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் நமக்கு ஸ்ட்ரெஸ் குறைகிறது.
பரங்கி விதைகள்: சாதாரணமாக பரங்கிக்காய் கூட்டு செய்து சாப்பிடும் போது, அதில் உள்ள விதைகளை நாம் தூக்கி எறிந்து விடுகிறோம். பரங்கி விதைகளின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை. அதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-6 கொழுப்புகள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
0 Response to "இந்த 5 விதைகள் போதும் - ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!"
Post a Comment