நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.
இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.
இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "கிளீன் நோட் பாலிசியின்படி", ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சில கேள்விகளும் பதில்களும்
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் என்ன நடக்கும்? மக்கள் வைத்திருக்கும் ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை என்ன செய்வது?பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
பணத்தை வங்கியில் செலுத்த காலக்கெடு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செலுத்த பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கவும், அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும்/அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா?
ஆமாம். ஒரே நேரத்தில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ₹20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ஆர்ஓக்கள்) உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும்.
2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரையிலான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.
₹2000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?
ஆமாம். ₹2000 ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?
ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ₹2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம்.
கணக்குகளில் டெபாசிட் செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டபூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.
மாற்றக்கூடிய ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு செயல்பாட்டு வரம்பு உள்ளதா?
பொதுமக்கள் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக பரிவர்த்தனைகள் (BCs) மூலம் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?
ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ₹4000/- என்ற வரம்பு வரை பரிவர்த்தனை செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?
ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23, 2023 முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கியின் கிளைகளில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹20,000/- வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக ₹20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். ₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.
ரூ. 2000 டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இது முற்றிலும் இவலசமாக வழங்கப்படும் சேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவரால் உடனடியாக ₹2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு வங்கி ₹2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார்தாரர் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் (RB) கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் இந்த புகார் பக்கம் உள்ளது.
பணமதிப்பிழப்புக்கு பிறகு அறிமுகமான ரூ. 2000 நோட்டுகள்
2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த அடுத்த சில மாதங்களில், அதாவது 2016, நவம்பர் மாதம் 8ஆம் தேதி, திடீரென ஒரு நாள் இரவு பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சியில் தோன்றி இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கையை பணப்பிழப்பு அறிவிப்பு என்று அழைக்கப்பட்டது.
மேலும், பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் 500 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் பல ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் 2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று 2021ஆம் ஆண்டில் அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் ஆக இருந்த அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
0 Response to "ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி - உங்களுக்கு எழும் இயல்பான சந்தேகங்களும் பதில்களும்"
Post a Comment