புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தேசிய கல்விக்கொள்கை மத்திய அரசு மூலம் கடந்த 2020ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்துவிட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு, இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பள்ளிக்கல்வி மாநில பட்டியலில் இருக்கிறது. அதனால் திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டது.
குலக்கல்வி:
அதோடு இந்த திட்டம் குலக்கல்வி திட்டத்தை ஆதரிக்கிறது. மாணவர்களை மேலும் பின்னோக்கி செல்ல இது வழி வகுக்கும். இந்தி மொழியை திணிக்கிறது. மீண்டும் முழுமொழி கொள்கையை கொண்டு வர இந்த திட்டம் காரணமாக இருக்கும்.
அதனால் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் தேசிய கல்விக்கொள்கை சார்பாக விவாதிக்க குஜராத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளவில்லை.
தனியாக புதிய கல்விக்கொள்கை:
அதோடு தமிழ்நாட்டிற்கு என்று தனியாக புதிய கல்விக்கொள்கையை அமைக்க குழு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் இதற்காக குழு உருவாக்கப்பட்டுள்ளது.
13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டு இவர்கள் அடுத்த வருடத்திற்குள் அறிக்கை அளிப்பார்கள். அதை வைத்து அடுத்த ஆண்டு கல்வி திட்டம் மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
அன்பில் மகேஷ் உத்தரவு:
இந்த நிலையில்தான் தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை கொண்டு வரப்படும். இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக இவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த குழு பல லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள், வேந்தர்கள், துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் சந்தித்து உள்ளது.
இதை அடிப்படையில் அடுத்த 4 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்த இவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி மாணவர் சேர்ப்பு சராசரி:
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தேசிய அளவில் உயர் கல்வி மாணவர் சேர்ப்பு சராசரி 50 சதவிகிதத்தை தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதை GER என்று அழைப்பார்கள். அதாவது Gross enrolment ratio. பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேரும் நபர்களின் எண்ணிக்கை ஆகும் இது. இதன் தேசிய சராசரி 27.1%. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி 51.4% ஆகும்.
தமிழ்நாடு முன்னேற்றம்:
தமிழ்நாடு இந்த சராசரியை 15 வருடங்களுக்கு முன்பே அடைந்துவிட்டது. இதைத்தான் இப்போது தேசிய கல்விக்கொள்கை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
இதைத்தான் கல்வியாளர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.தமிழ்நாடு கல்வியில் உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்காவில் கூட இவ்வளவு மாணவர் சேர்க்கை இல்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் தேசிய கல்விக்கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
0 Response to "மொத்தமாக எல்லாமே மாறப்போகுது.. பள்ளிக்கல்வியில் மெகா மாற்றம்? அன்பில் மகேஷ் உத்தரவு"
Post a Comment