சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் பொறியியல், சட்டக்கல்வி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2018 - 19ஆம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் சட்டக்கல்வி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இதில், பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் விஜயவாடா, சைதன்யா நாராயணன் ஜூனியர் கல்லூரி மாணவர் சாய் ரானாடீர் 154.47 சமன் செய்த மதிப்பெண்ணுடன் (ஜே.இ.இ. முதன்மை மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 98.5 சதவீதமும், ஜே.இ.இ. முதன்மை 2018 தேர்வில் 320 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர் அரவிந்த் அண்ணாமலை 97.37 சமன் செய்த மதிப்பெண்களுடன் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 482 மதிப்பெண்களும் ஜே.இ.இ. முதன்மை 2018 தேர்வில் 258 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.


மேலும், 70 சதவீத இடங்களுக்கான ஒதுக்கீடு இந்த ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையிலும், மீதமுள்ள 30 சதவீத

இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சமனப்படுத்தும் முறையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆந்திரப்பிரதேச மாநிலம், மேதிப்பட்டினம் நாராயணா ஜூனியர் கல்லூரி மாணவி அகுலாவர்ஷா 1000-க்கு 992 மதிப்பெண்கள் பெற்று சமனப்படுத்தும் முறையில் முதல் தகுதியைப் பெற்றுள்ளார்.

சட்டக் கல்விப் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் தில்லி பப்ளிக் பள்ளி மாணவி காருண்யா லெட்சுமி 99.85 சமன் செய்த மதிப்பெண் (கிளாட் 2018 மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில்) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதமும், கிளாட் 2018 தேர்வில் 121.25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

விண்ணப்பங்கள் 2018, ஜூன் 9-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை பெறப்பட்டு, இரவு 9 மணிக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

நிகழாண்டு ஜே.இ.இ. மதிப்பெண்ணுடன் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் ஜே.இ.இ. மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம். இவ்வாறு சேர்க்கை நடத்தும் ஒரே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே.

இதுபோன்று சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகரித்துள்ளன. கிளாட் 2018 மதிப்பெண்ணுடன் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட நிகழாண்டு உயர்ந்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில், கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய நேரம், நாள் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு www.sastra.edu என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகுதி அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

சட்டக்கல்விக்குத் தகுதி அடிப்படையில் வெளிப்படையான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2018 ஜூன் 19-ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரபிரதேசம், கோவா, பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜார்கண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 20,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியில் சேர்க்கைக்கு 1,600 இடங்களும், சட்டக்கல்வி சேர்க்கைக்கு 120 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதே போன்று வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், அருணாசலபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார் ஆகிய மாநில மாணவர்களுக்குச் சேர்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும்.

மேலும், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.