மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும், மே, 6ல் நடந்தது. விண்ணப்பித்திருந்த, 13.27 லட்சம் மாணவர்களில், 96 சதவீதமான, 12.73 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் இருந்து, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது.
இது குறித்து, 'டாப்பர் டாட் காம்' இணைய பயிற்சி நிறுவனத்தின், துணை தலைவர் ராஜசேகர் ராட்ரே வெளியிட்ட ஆய்வில், 'இந்தாண்டு, நீட் தேர்வு வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்தது. 'மற்ற பாடங்களை விட, இயற்பியல் பாடம் மிக கடினமாக இருந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.பிளஸ் 2 பாடத்திட்டத்தில், இயற்பியலில், 24 கேள்விகள்; வேதியியலில், 20; உயிரியலில், 46 கேள்விகள் என, மொத்தம், 90 கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு நிகராக, பிளஸ் 1 பாடத்திட்டத்திலும், இயற்பியலில், 21; வேதியியலில், 25 மற்றும் உயிரியலில், 44 கேள்விகள் என, 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
நீட் தேர்வில், பிளஸ் 2 பாடத்துக்கு நிகராக, பிளஸ் 1 பாட அம்சங்கள் இடம் பெற்றதால், பிளஸ் 1 பாடத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.