பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு முடிவில், இரண்டாம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புதிய மாற்றம் : எந்த பள்ளியும், தங்கள் பள்ளியின், 'டாப்பர்' அல்லது முதல் மூன்று இடம் என, எந்த தனிப்பட்ட மாணவரையும் குறிப்பிட்டு, விளம்பரம் செய்யக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு முதல், மற்றொரு புதிய மாற்றத்தையும், அரசு தேர்வுத் துறை அமல்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, பள்ளிக்கல்வி செயலராக, சபிதா இருந்த போது, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல், மற்ற முக்கிய பாடங்களுக்கும், 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற போட்டி : 'தவிர்க்க முடியாத நிலையில், தேர்வில் மிக தெளிவாக விடைகளை எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே, சென்டம் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மிக சிலர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளதால், சென்டம் பட்டியல் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.