பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பி.இ. படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 முதல் 3 மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதாவது, 200-க்கு 200 தொடங்கி ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு இடையிலான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பி.இ. சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணிதம், இயற்பியல், வேதியியல் பாட மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு பாட வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்கள் விவரம் வெளியிடப்பட வில்லை என்றபோதும், ஒட்டுமொத்த பிளஸ் 2 மதிப்பெண் விவரங்களை ஒப்பிடும்போது, 1200-க்கு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.
இந்த ஆண்டு 231 பேர் மட்டுமே 1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1180 முதல் 1151 மதிப்பெண் வரை 12,283 மாணவர்கள் எடுத்திருந்தனர். இந்த ஆண்டு 4,847 மாணவர்கள் மட்டுமே இந்த மதிப்பெண்களில் உள்ளனர். கடந்த ஆண்டு 1150 முதல் 1126 மதிப்பெண் வரை 14,806 மாணவர்கள் எடுத்திருந்தனர். இந்த ஆண்டு 8,510 மாணவர்கள் மட்டுமே இந்த மதிப்பெண்களில் உள்ளனர். கடந்த ஆண்டு 1125 முதல் 1101 மதிப்பெண்கள் வரை 17,750 மாணவர்கள் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 11,739 மாணவர்கள் மட்டுமே இந்த மதிப்பெண்களில் வருகின்றனர்.
கடந்த ஆண்டு 1100 முதல் 1001 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் 95,906. இந்த ஆண்டு 71,368 மாணவர்கள் மட்டுமே இந்த மதிப்பெண்களில் வருகின்றனர். இதுபோல, 700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 ஆயிரம் பேர் கூடுதலாகி இருக்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு 2,80,938 பேர் 700-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 3,47,938 பேர் 700-க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இந்த காரணத்தால், பி.இ. கட்-ஆ"ஃ"ப் நிச்சயம் குறையும் என்கின்றனர் கல்வியாளர்கள். இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
இந்த நிலை காரணமாக பி.இ. படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 முதல் 3 மதிப்பெண்கள் வரை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்...சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, பிஎஸ்ஜி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றபோதும், அடுத்தகட்ட கல்லூரிகளுக்கான கட்-ஆ"ஃ"ப் மதிப்பெண் நிச்சயம் குறையும் என்றார் அவர். இதுபோல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதை நன்கு அறிய முடிகிறது. மேலும், கல்லூரி நிர்வாகிகளுடன் பேசும்போது, முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 எடுத்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த முறை வெகுவாகக் குறைந்திருப்பதும் தெரிகிறது. எனவே, இந்த ஆண்டுக்கான பி.இ. கட்-ஆஃப் நிச்சயம் குறைய வாய்ப்புள்ளது என்றார்