அரசு பள்ளிகளில் கட்டணம் வசூல் : கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை

'அரசு பள்ளிகளில்,கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்து உள்ளது. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், தமிழ் வழி மாணவர்களுக்கு, எந்த கட்டணமும் இல்லை.

ஆங்கில வழி மாணவர்களுக்கு, ஆறு முதல் எட்டு வரை, 200 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 250 ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 500 ரூபாய் என, ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு மற்றும் அரசு உதவி பள்ளி களில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரில், ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளியை நடத்த, அரசுக்கு உதவுவதாகக் கூறி, பதவியை தவறாக பயன்படுத்துவதாக, புகார்கள் வந்துள்ளன.

தாங்களே கட்டணம் நிர்ணயித்து, மாணவர்களின் பெற்றோரிடம் வசூலிப்பது, அரசு வழங்கும் இலவச புத்தகம், சீருடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது என, அராஜக செயலில் ஈடுபடுவதாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து, மாவட்டங்களில் ஆய்வு நடத்தவும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களிடம் அதிக கட்டணம் கேட்டு, துண்டுச்சீட்டு அனுப்பியதும், புதிதாக சேரும் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் நோக்கில், நுழைவு தேர்வு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, 'தலைமை ஆசிரியரை மீறி, பள்ளி நிர்வாகத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தலையிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தனர். மேலும், 'எந்த பள்ளியிலும், அரசின் கட்டணத்தை மீறி வசூலிக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, போலீசில் புகார் அளித்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் கூறியுள்ளனர்.