பி.இ. சேர்க்கையை போன்றே நேரடி இரண்டாமாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கும் இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டுமென தனது அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-
தகுதிவாய்ந்த பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாமாண்டு பொறியியல் படிப்புக்கு, விண்ணப்பிக்க மூன்று இணையதளங்கள் (www.accet.co.in www.accet.edu.in www.accetlea.com) அளிக்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் நேரடியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த பிறகு அதை பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.