கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தகவல் புத்தகம் வெளியீடு!


இந்திய அளவில், ஆன்லைன் மூலம் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முறை புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மருத்துவக் கல்லுாரிகளில் துவங்கி, பாலிடெக்னிக் கல்லுாரி வரை, 15,063 இடங்கள், ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது.இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:புதுச்சேரியில் கடந்த ஆண்டு வரை, தொழில்முறை கல்விக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் கலந்தாய்வு மூலமாகவும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கப்பாஸ் மூலமாகவும் நடந்து வந்தது.
தற்போது, தொழிற்கல்வி பிரிவுகள், தொழிற்கல்வி அல்லாத பாடப்பிரிவுகள், ஓட்டல் மேலாண்மை, பட்டய படிப்பு, நுண்கலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை மற்றும் பகுதி நேர பட்டய படிப்பு போன்றவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலமாக ஆன்லைன் வழி சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே குடையின் கீழ் நடத்தப்படும் இந்த சேர்க்கை, இந்திய அளவில் இதுவே முதல் முறையாகும்.
தகவல் புத்தகம் வெளியீடு
ஒரு மாணவர், எத்தனை பாடப்பிரிவுகளுக்கு வேண்டுமானாலும், ஆன்லைன் மூலம், ஒரே விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. அவர் ஒவ்வொரு கல்லூரிக்கும் வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.2018-19க்கான விரிவான மாணவர் சேர்க்கை தகவல் புத்தகம் மற்றும் செய்தி அறிவிப்பு இன்று (30ம் தேதி) வெளியிடப்படுகிறது.
இதில், அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பாடப்பிரிவு விபரங்கள், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் கல்லூரி வாரியான சேர்க்கை இடங்கள், இட ஒதுக்கீடு, பாடப்பிரிவு வாரியாக கட்டணம், கல்லூரியில் சேருவதற்கான தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் தகுதிப்பட்டியல் தயாரிப்பு போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.தகவல் புத்தகத்தை, சென்டாக் வலைதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பிரதிகள் அனைத்து கல்லூரிகளிலும் வைக்கப்பட்டிருக்கும். தேவையானவர்கள் ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
வழிகாட்டி மையங்கள்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கும், பாடப்பிரிவு தேர்ந்தெடுப்பது தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டவும், உதவி மையங்கள் அனைத்து கல்லூரிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்ப ஆய்வுக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக அல்லது கேட்பு வரைவோலை மூலம் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதால் மற்ற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நேரம் மற்றும் செலவினங்களை தவிர்க்கலாம்.
இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், இட ஒதுக்கீடு தகவல் அனுப்பப்படுவதால், முன்பு இருந்ததைப்போல் கவுன்சிலிங் மையங்களில் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.கடந்த காலங்களில் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. இம்முறை அனைத்து கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், அவரவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்ய வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நடைமுறை, புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். கல்லூரியிலும் காலி இடங்கள் விடாமல் நிரப்பப்படுவதை உறுதி செய்யும்.ஆன்லைன் மூலம் நடைபெறுவதால் துரிதமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தவறு இல்லாத வகையிலும் சேர்க்கையை முடிக்க உதவும்.
15,063 இடங்கள்
6 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளிலும், 17 பொறியியல் கல்லூரிகள், 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 2 மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள், 2 கல்வியியல் கல்லூரிகள், 9 செவிலியர் கல்லூரிகள், 6 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் வேளாண் கல்லூரி, கால்நடைக்கல்லூரி, நுண் கலைக் கல்லூரி, சட்டக்கல்லூரி, ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி என மொத்தம் 58 கல்லூரிகளில், சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இக்கல்லூரிகளில் எம்.டெக்., -எம்.சி.ஏ.,- எம்.பி.ஏ., -எம்.எஸ்சி,- எம்.எஸ்சி (நர்சிங்),- எம்.பி.டி.,- எம்.பார்ம்.,- எம்.வி.எஸ்சி., -எம்.பில்., -எம்.எஸ்சி..(ஹான்ஸ்) வேளாண்மை, - எம்.எஸ்சி (ஹான்ஸ்) ஹார்ட்டிக்கல்ச்சர்., எம்.ஏ., -எம்.எஸ்சி., -எம்.காம்., -எம்.பில்.,- எம்.சி.ஏ., -எல்.எல்.எம்., ஆகிய பட்டமேற்படிப்பு தொழில்சார் மற்றும் தொழில் சாராத பாடப்பிரிவுகளில் 1,797 இடங்களும்,பி.எட்., -எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,- பி.ஏ.எம்.எஸ்., -பி.வி.எஸ்.சி அண்டு ஏ.எச்.,- பி.பி.டி., பி.எஸ்சி (நர்சிங், எம்.எல்.டி.,- எம்.ஆர்.ஐ.டி) பி.டெக்.,- பி.பார்ம், -பி.ஏ., -எல்.எல்.பி.,- பி.எஸ்சி (வேளாண்மை, ஹாட்டிகல்ச்சர்) ஹான்ஸ், பி.ஏ.,- பி.காம்,- பி.எஸ்சி.,- பி.பி.ஏ.,- பி.சி.ஏ., -பி.பி.ஏ., -பி.வி.ஏ.,- பி.எஸ்சி.
ஹோட்டல் மேலாண்மை ஆகிய இளநிலை தொழில் சார் மற்றும் தொழில் சாராத பாடப்பிரிவுகளில் 11,281 இடங்களுக்கும், 1985 பட்டய பாடப்பரிவுகள் (பகுதிநேர பாடப்பிரிவுகள் உள்பட) மொத்தம் 15,063 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.-