பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்') கீழ் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க...: கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தத்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத இயலும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 11, 12 ஆகிய இரு தேதிகளில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள மார்ச், ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.