அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அனைத்து தனித்தேர்வர்களும் ஜூன் 8 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 8 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விவரங்களைப் பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் தனித் தேர்வர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.