அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான இலவசப் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகளிர் பயன்பெறும் வகையில் அரசினர் அம்பத்தூர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) சார்பில் வேலைவாய்ப்புக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கென தனியே நடைபெறும் இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், இங்கு பயிற்சி பெறும் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைப்படக் கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை, சலுகை விலையில் ரயில் பயண அட்டை மற்றும் மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மகளிர் சேருவதற்கு வயது வரம்பு எதுவும், கிடையாது.
இப்பயிற்சி நிலையத்தில் குறிப்பிட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளான கம்மியர் கருவிகள், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், செயலகப் பயிற்சி, கட்டடப்பட வரைவாளர், தையல் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சிகள் ஓராண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட இருக்கின்றன. இதில் சேர விரும்பும் மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்று பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.