பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ்கள் ஜூன் 5 முதல் ஜூன் 14 வரை சரிபார்க்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 562 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை, கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பி வருகிறது. மொத்தம் உள்ள 2.6 லட்சம் பொறியியல் காலி இடங்களில் 1.9 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த வருடம் முதல், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும். கவுன்சலிங்குக்கான கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்ற அறிவிப்பால் கிராமப்புற மாணவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதியப்பட்டாலும் தேவையான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.