தனித்திறன் தேடல் போட்டி 5-ம் தேதிக்குள் பதிவு


மாநில அளவிலான தனித்திறன் தேடல் போட்டியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், வரும் 5-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் பா.ஜோதி நிர்மலா சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அட்வான்ஸ்டு டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் மாநில திறன் மாநாடு ஜூன் 9,10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இந்த மாநாட்டை தொடர்ந்து ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான தனி திறன் தேடல் போட்டிகள் கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள அரசு ஐடிஐ நிலையத்திலும், கிண்டி அட்வான்ஸ்டு டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலும் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் தனிநபர்கள் www.tnskillshunt.in என்ற இணையதளத்தில் ஜூன் 5-ம் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
தேசிய அளவிலான போட்டி ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தனி திறன் தேடல் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம். மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஜூன் 21 முதல் 23 வரை பெங்களூருவில் நடைபெறும் மண்டல அளவிலான திறன் போட்டியிலும் அதைத்தொடர்ந்து, ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான திறன் போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.