தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிரwww.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 45,000 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க 25,000 விண்ணப்பங்களும் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு விண்ணப்பங்கள் தேவைப்பட்டாலும் அச்சடித்து மீண்டும் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.