வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி முதலே இந்திய ராணுவத்தில் வேலூர் மாவட்டத்தினர் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக, முதலாம், இரண்டாம் உலகப் போரின்போது இந்திய ராணுவத்தில் இடம்பெற்ற தமிழக வீரர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்தவகையில், ஆங்கிலேயர் ஆட்சி முதலே வேலூர் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் ராணுவப் பணியின் மீதான ஆர்வம் அதிக அளவில் இருந்து வருகிறது.
தற்போதும் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் வீரர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் சுமார் 50 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சமிதி தெரிவிக்கிறது.
அவ்வாறு ராணுவத்தின் மீதான இளைஞர்கள் ஆர்வம் காரணமாக கடந்த 1976-இல் தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் ஊரீசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. பாதுகாப்பு, போர்த் திறனியல் குறித்த இளங்கலை பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 55 இடங்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாடப்பிரிவு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 70 இடங்களாக அதிகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்பாடப்பிரிவில் சேர மாணவர்களிடையே ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அக்கல்லூரியில் இப்பாடப்பிரிவில் சேர இதுவரை 800-க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவிகள் என்பதும் தெரியவந்துள்ளது. அவ்வாறு வரப்பெற்ற விண்ணப்பங்களில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, திருச்சி, மதுரை, ராஜபாளையம், விருத்தாசலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, அக்கல்லூரியின் பி.ஏ.பாதுகாப்பு, போர்த் திறனியல் துறைத்தலைவர் டி.திருமாறன் கூறியதாவது:
கடந்த 1971-இல் இந்தியா -பாகிஸ்தான் இடையே நடந்த போருக்குப் பிறகு இந்திய மக்களிடையே பாதுகாப்புத் துறை மீதான ஆர்வம் குறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பு, போர்த்திறனியல் குறித்த பாடங்களைத் தொடங்கிட அப்போதைய ராணுவ தளபதி ஸ்கடர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை ஏற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பாதுகாப்பு, போர்த்திறனியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டதுடன், பி.ஏ பாடப்பிரிவைத் தொடங்க தமிழகத்திலேயே வேலூர் ஊரீசு கல்லூரிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் பி.ஏ. பாதுகாப்பு, போர்த் திறனியல் பாடப்பிரிவுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.
அதற்கு மற்ற பிரிவுகளைக் காட்டிலும் இப்பாடப்பிரிவில் மட்டுமே அரசியல் அறிவியல், பொருளாதாரம், நிர்வாகவியல், பாதுகாப்பு மேலாண்மை, வரலாறு, போர், புள்ளியியல், இதழியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த பாடப் பிரிவை படிப்பவர்கள் தேசியப் பாதுகாப்பு, பன்னாட்டு அரசியல் பிரிவுகளில் பணிகளில் சேர முடியும். குறிப்பாக, எஸ்.எஸ்.பி., சிடிஎஸ், யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ள இந்தப் பாடப்பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன்காரணமாக, பி.ஏ. பாதுகாப்பு, போர்த்திறனியல் பாடப்பிரிவில் சேர மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
தற்போது ராணுவத்தின் உற்பத்திப் பணிகள் தனியாருக்கு அளிக்கப்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் இத்துறையில் தனியார் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. தவிர, இப்பாடப்பிரிவில் படித்தவர்கள் பாதுகாப்புத் துறையில் மட்டுமன்றி சீருடைப் பணி, சட்டம், அரசியல் ஆலோசகர் என பல்வேறு பணிகளிலும் சேர முடியும். இதன்காரணமாகவும், இந்த பாடப் பிரிவுக்கு மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஊரீசு கல்லூரியைத் தொடர்ந்து 1979-இல் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியிலும், 1981-இல் உதகை அரசு கலைக் கல்லூரியிலும், 2013-இல் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியிலும், கோவை அரசு கலைக்கல்லூரி யிலும் இந்த பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. எனினும், அதிகரித்து வரும் மாணவர்கள் ஆர்வத்தை அடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட அரசுக் கல்லூரிகளிலும் இந்த பாடப்பிரிவை தொடங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.