"நாராயண... நாராயண..." என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டு கையில் வீணையுடன் ஈரேழு உலகத்தையும் சுற்றி வரும் நாரதரை நாம் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பார்த்திருப்போம். யார் இந்த நாரதர் என்பதை தான் புராண அடிப்படையில் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதற்கு முன், புராண அடிப்படையில் சிலவற்றை நாம் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை முதலில் பார்க்கலாம்!
நாரதர் சுற்றிவரும் 14 உலகம் எவை எவை என்பதை முதலில் பார்க்கலாம்.
1. பூளோகம் (பூமி) இதில் தாம் நாம் வாழ்கிறோம்.
பூளோகத்திற்கு மேலாக 7 உலகங்கள் உண்டு. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
2. புவர்லோகம்: இதில் கிரகங்கள், நட்சத்திரங்கள் (தேவதைகள்) உள்ளன
3. சுவர்லோகம்: இங்கு முனிவர்கள் மட்டுமே வாழ்கின்றனர். தபநிலையில் இருப்பார்கள்.
4. மஹர்லோகம்: இந்திரலோகம், இந்திரன் உள்பட தேவர்கள் இருப்பார்கள்.
5. ஜனோலோகம்: இந்த லோகத்தில் நம் முன்னோர்கள் (பித்ருக்கள்) இருப்பார்கள்.
6.தபோலோகம்: தேவதைகளின் உலகம்
7.சத்யலோகம் : பிரம்மதேவன் இருப்பிடம்
இப்பொழுது பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகத்தையும் பார்க்கலாம்.
1. அதல லோகம் : வேற்று மனிதர்களின் இருப்பிடம்
2. விதல லோகம்: அரக்கர்கள் வசிப்பிடம்.
3. சுதலலோகம்: மகாபலியின் உலகம்
4. தலாதல லோகம்: மாயாவிகளின் உலகம்புராண அடிப்படையில் உலகம்
5. மகாதல லோகம்: புகழ்பெற்ற அசுரர்களின் உலகம்
6. பாதாள லோகம்: பாம்புகளின் உலகம்
7. ரஸாதல லோகம் : அசுர குருக்கள் உலகம்.
ஆக இந்த 14 உலகத்தையும் நாரதரானவர் சுற்றிவருவதாக புராணங்கள் கூறுகின்றன.
அடுத்ததாக நமது பூளோகத்தின் நாள்காட்டியையும் புராண அடிப்படையில் கொஞ்சம் பார்க்கலாம்.
யுகம் - (பூமியின் வயது)
யுகம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1 கிருதயுகம்: இந்த யுகத்தில் மொத்தம் 17,28,000 வருடங்கள். இது முடிந்து விட்டது. இதில் ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் 840 வருடங்கள் என்றிருந்ததாம்.
2. திரேதா யுகம்: இந்த யுகத்தில் மொத்தம் 12,96,000 வருடங்கள். இது முடிந்து விட்டது. இதில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் 616 வருடம் என்றிருந்ததாம்.
3 . துவாபர யுகம்: இந்த யுகத்தில் மொத்தம் 8,64,000 வருடங்கள். இது முடிந்து விட்டது. இதில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் 300 வருடம் என்றிருந்ததாம்.
4 கலியுகம்: இந்த யுகத்தில் மொத்தம் 4,32,000 வருடங்கள் (கி மு 3102 முதல் கலி ஆரம்பித்து விட்டது. தற்பொழுது கிபி.2023). ஆக, கலியுகம் ஆரம்பத்து 5,125 ஆண்டுகள் தான் ஆகிறது.
**********
கால பிரிவு:
15 நிமிடம் 1 காஷ்டை
30 காஷ்டை 1 கலை
30 கலை 1 முகூர்த்தம்
30 முகூர்த்தம் 1 நாள் .
15 நாட்கள் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
6 மாதம் 1 அயனம்
2 அயனம் 1 வருடம்
**********
4 யுகம் (கிருத , திரேதா, துவாபர , கலி) ஒரு மகா யுகம்.
71 மகா யுகம் சேர்ந்தது ஒரு மன்வந்தரம்.
14 மன்வந்தரம் சேர்ந்தது ஒரு கல்பம்.
கல்பம் மொத்தம் 30 இருக்கிறது.
கல்பங்கள்: வாமதேவ கல்பம், ஸ்வேதவராக கல்பம், நீல லோகித கல்பம், ரந்தர கல்பம், ரௌரவ கல்பம், தேவ கல்பம், விரக கிருஷ்ண கல்பம், கந்தர்ப்ப கல்பம், சத்திய கல்பம், ஈசான கல்பம், தமம் கல்பம், சராஸ்வத கல்பம், உதான கல்பம், காருட கல்பம், கெளரம கல்பம், நரசிம்ம கல்பம், சமான கல்பம், ஆக்னேயகல்பம், சோம கல்பம், மானவ கல்பம், தத்புருஷ கல்பம், வைகுண்ட கல்பம், லெஷ்மி கல்பம், சாவித்ரி கல்பம், கோர கல்பம், வராஹ கல்பம், வைராக கல்பம், கெளரி கல்பம், மாஹோர்வர கல்பம், பிதிர் கல்பம்.
இதில் நாம் இரண்டாவது கல்பத்தில் இருக்கிறோம். முதல் கல்பத்தின் முடிவில் பிரளயம் வந்து மீண்டும் அடுத்த யுகத்தில் இப்பூமியானது சுற்றிக்கொண்டு இருக்கிறது என நம்பப்படுகிறது.
சரி இப்பொழுது நாரதர் யார் என்பதை பார்க்கலாம்.
நாரதர் வியாசரிடம் தனது முற்பிறவியை பற்றி கூறுதல். (பாகவத புராணத்தில் உள்ளது)
"வியாச முனிவரே நான் முன் கல்பத்தில் (வாமதேவ கல்பம்) பிரம்மத்தை பற்றியே நினைத்து வரும் பிராமணர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலைக்காரியின் மகனாக பிறந்தேன். துறவிகள் பின்பற்றும் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் அவர்கள் ஓர் இடத்திலேயே தங்கி தவம் மேற்கொண்டனர். நான் சிறுவனாக இருக்கும்போது அவர்களுக்கு பணிவிடை செய்வதில் ஈடுபட்டேன். அவர்களது சொற்படி நடந்தேன். அவர்களுக்கு செய்த பணிவிடையின் பயனாக எனது பாவங்கள் அனைத்தும் தொலைந்தது. மனம் தெளிவு பெற்றது. அவர்கள் செய்து வரும் பகவத் கீர்த்தனங்களில் என் மனம் ஈடுபாடு கொண்டது. அதனால் பகவானிடம் மிகுந்த பற்றுதலும் உண்டானது.
அந்த மகான்கள் சாதுர்மாஸ்யம் முடித்து திரும்புகையில் என் மேல் இரக்கம் கொண்டு எனக்கு இந்த பாகவத சாஸ்திரத்தை உபதேசித்தார்கள்.
மகான்கள் சென்றபின்பு எனது இளமையில் ஸ்ரீஹரியின் குண கீர்த்தனங்களையே(பாடல்கள்) தொழிலாக செய்து வந்தேன். என் தாயாருக்கு நான் ஒரே பிள்ளை. அவள் ஒன்றும் அறியாதவள். அபலை. என் மீது அதிகமாக அன்பு செலுத்தினாள். எனது யோக க்ஷேமங்களை பற்றி மிகவும் கவலைப்பட்டாள். அவளால் தன்னிச்சையாக எதுவும் செய்ய இயலவில்லை. நான் அப்போது ஐந்து வயது பாலகன். தாயின் பாசத்திற்கு கட்டுப்பட்டு அந்த அந்தணர் வீட்டிலேயே வசித்து வந்தேன். ஒரு நாள் இரவு பால் கறப்பதற்கு வீட்டை விட்டு வெளியே சென்றாள் என் அன்னை. வழியில் ஒரு பாம்பு அவளை தீண்ட அகால மரணம் அடைந்தாள்.
அதன் பிறகு நான் காட்டை அடைந்து கடவுளை நினைத்து தியானித்தேன்.
பகவான் கருணையோடு என்னிடம், "நீ சாதுக்களுக்கு பணிவிடை செய்த காலம் குறைவாக இருந்தாலும் என்னிடம் உனக்கு நிலையான அன்பு ஏற்பட்டது. இந்த உடலை விட்ட பிறகு நீ எனக்கு பார்க்ஷதனாக இருப்பாய். பிரளயத்திற்கு பின்பும் உனக்கு முற்பிறப்பின் நினைவு மாறாமலிருக்கும்" என்றார்.
அதன் பிறகு குறிப்பிட்ட காலம் வந்ததும் நான் மரணம் அடைந்தேன். கல்ப பிரளய முடிவில் இம்மூன்று உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, யோக நித்திரையில் இருந்த பொழுது பிரம்மாவின் மூச்சு காற்றுடன் நானும் அவரது இதயத்தில் வீற்றிருந்தேன்.
ஆயிரம் சதுர் யுகங்களின் முடிவில் விழித்துக் கொண்ட பிரம்ம தேவர் இவ்வுலகத்தை படைக்க முற்பட்டபோது, நானும், மரீஷி முதலிய மகரிஷிகளுடன் பிரம்மாவின் மூச்சு காற்றிலிருந்து தோன்றினேன்.
பகவானால் எனக்கு அளிக்க பட்டஸ "ரி க ம ப த நி " முதலிய நாத பிரும்ம ஸ்வரூபமான இந்த வீணையில் பகவானது திருவிளையாடல்களை வாசித்துக் கொண்டு பிரம்மச்சாரியாக இம்மூன்று உலகையும் சுற்றி வருகிறேன்" என்று தான் அவதரித்ததை நாரதர் வியாசரிடம் கூறினார்.
0 Response to "நாரதர் சுற்றிவரும் 14 உலகம் எவை? நாரதர் யார்? பூமியின் வயதென்ன? புராணங்கள் வழியே விரிவான தகவல்கள்!"
Post a Comment