மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு (DA Hike) அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து புதிய தகவல்கள் வந்துள்ளன.
காய்கறிகள், சமையல் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டு மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. இந்த முறை 3 சதவீத அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு இந்த தகவலை அறிவித்தால் ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதனால் பலன் அடைவார்கள். மத்திய பணியாளர் நலத்துறை அகவிலைப்படியை எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிப்பு வெளியாகும்.
இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோபால் மிஷ்ரா கூறுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதுதான் நியாயமாக இருக்க முடியும். ஆனால் 3 சதவீதத்திற்கு சற்று அதிகமாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியாகும் என்று எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. என்று கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம். அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூடி, நிதியமைச்சகத்தின் செலவு பிரிவு அளிக்கும் ஆவணங்களுக்கு ஒப்புதல் வழங்கும். இதைத் தொடர்ந்து ஜூலை 1, 2023 அன்றிலிருந்து கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது வரை பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என 1 கோடிக்கும் அதிகமானோர் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்.
முன்னதாக மார்ச் 24 ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகி, ஜனவரி 1 ஆம் தேதியை கணக்கிட்டு வழங்கப்பட்டது. கடந்த முறை 4 சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியது. இது தவிர, ஃபிட்மென்ட் பேக்டர் விகிதங்களையும் அரசு அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அதிகரிக்கப்படுமானால் அது மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸாக இருக்கும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
0 Response to "ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல்"
Post a Comment