மிதுன ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் கிரகங்களின் நிலையை வைத்து கணிக்கும் பொழுது, மூன்று கிரகங்கள் ராசிக்கு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது.
அதேபோல மூன்று கிரகங்கள் பாக்கிய ஸ்தானத்தைக் குறிக்கும் 9 ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில், குரு பகவான் லாபத்தை தரும் குருவாக பங்குனி மாதம் முழுவதும் இருக்கிறார். பெரும்பாலான விஷயங்களில் மிதுனம் ராசிக்கு பங்குனி மாதம் வளர்ச்சியும், மகிழ்ச்சியும், ஏற்றமும் நிறைந்த மாதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கசப்புகள் நீங்கும். உறவுகள் இணக்கமும் நெருக்கமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும்.
மிதுனம் ராசிக்கு 2024 பங்குனி மாதம் செவ்வாய் சனி சேர்க்கை பலன்
மிதுனம் ராசிக்கு அஷ்டம வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்த நிலை மாறி கும்ப ராசியில் செல்லவிருக்கிறார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் இருக்கிறார். சனியுடன் செவ்வாய் பங்குனி மாதம் முழுவதுமே சஞ்சரிக்கிறார்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி சனி மற்றும் செவ்வாய் இரண்டுமே எதிரி கிரகங்கள். எனவே இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அசுப பலன்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானம் ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியுடன் வேலை மற்றும் லாபம் சம்பந்தப்பட்ட செவ்வாய் இணைவதால், வேலையில் மாற்றம் ஏற்படும். அலுவலக விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. மேலதிகாரிகளுடன் மற்றும் சீனியர்களுடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
சனி செவ்வாய் சேர்க்கையால், சொத்து பிரச்சனை இந்த மாதம் பெரிதாகலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவுகளுக்குள் ஏதேனும் வாக்குவாதங்கள் நடக்கும் வாய்ப்பிருக்கிறது.
கும்ப ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதால், வேலை, வியாபாரத்தில் லாபம் பெறுவது மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம் ராசிக்கு 2024 பங்குனி மாதம் வக்கிர புதன் பெயர்ச்சி பலன்
ஏற்கனவே புதபகவான் மீன ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வருகிறார். நீச்சம் என்பது வலிமை இழந்த நிலையை குறிக்கிறது. மார்ச் மாத கடைசியில் அதாவது பங்குனி மாதத்தின் மத்தியில் வலிமை இழந்த புதபகவான் வக்கிரமாகி பின்னோக்கி செல்ல இருக்கிறார். இது மிதுனம் ராசிக்கு உகந்த நிலை கிடையாது. மிதுன ராசியின் அதிபதியான புதன் நீச்சமடைவது என்பது பல விஷயங்களை மிதுன ராசியினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், நாள்பட்ட உடல் நல கோளாறுகள் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் பங்குனி மாதத்தில் அதை பெரிதாக்காமல் தள்ளிப் போடுவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது உள்ளிட்ட பரிவர்த்தனைகளை இப்பொழுது பேச வேண்டாம்.
மிதுனம் ராசிக்கு 2024 பங்குனி மாதம் உச்சம் அடையும் சுக்கிரன் பெயர்ச்சி பலன்
மிதுனம் ராசிக்கு புண்ணிய கிரகமான சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாகி உச்சமடைகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் ஏற்படுகிறது. ஏற்கனவே வலிமை இழந்த புதன் உச்சமடையும் சுக்ரனுடன் இணையும் பொழுது நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டு புதனால் பொற்காலமும், சுக்கிரனால் மிகப்பெரிய ராஜயோகமும் உண்டாகும். அதேபோல ராகுவுடன் இணையும் சுக்கிரனும், ராகுவின் பலத்தை பல மடங்கு அதிகப்படுத்தி பொன்னான நேரத்தை உருவாக்குகிறது. பங்குனி மாத தொடக்கத்தில் இருந்து வந்த நிலை மாறி, வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். பலவிதமான தடைகள் நீங்கி எதிர்பார்த்த விஷயங்கள் விரைவாக நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடியும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும், சொத்துக்கள் பிரச்சனை தானாகவே தீர்ந்துவிடும்.
பங்குனி மாதம் சுக்கிரன் பெயர்ச்சிக்கு வாழ்வில் பலவிதங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். இருப்பினும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் தொடர்ந்து தொல்லைகள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் வழியில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் சுபச் செய்திகளையும் பெறுவீர்கள்.
மிதுனம் ராசிக்கு 2024 பங்குனி மாதம் சூரியன் ராகு சேர்க்கை பலன்
சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகும்போது பங்குனி மாதம் தோன்றுகிறது. இந்த ஆண்டு முழுவதுமே மீன ராசியில் தான் ராகு சஞ்சரித்து வருகிறார். எனவே 2024 பங்குனி மாதம் முழுவதுமே ராகு மற்றும் சூரியன் சேர்க்கை மீன ராசியில் உங்கள் ராசிக்கு தொழிலை குறிக்கும் வீட்டில் நடக்கிறது.
எவ்வாறு சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை முரண்பாடாக இருக்கிறதோ அதேபோல சூரியன் மற்றும் ராகு சேர்க்கையும் முரண்பாடான அசுப சேர்க்கை ஆகும். மிதுன ராசிக்கு தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தை குறிக்கும் வீட்டில் ராகு மற்றும் சூரியன் இணைவது தொழில் ரீதியாக பலவிதமான சிக்கல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும். இந்த தொழிலை விட்டு விடலாம் என்று கூட நினைக்க வைக்கலாம். உங்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் உதவ முடியாத சூழ்நிலை ஏற்படலாம். சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் கொஞ்சம் தடுமாறக்கூடும். இது ஒரு மாதம் மட்டுமே என்பதால், தொழில் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களிலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம்.
மிதுனம் ராசிக்கு 2024 பங்குனி மாதம் அதிர்ஷ்டம் தருபவை
வணங்க வேண்டிய தெய்வம்: பிரதோஷ நாளில் விரதம் இருந்து நந்தி வழிபாடு
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு
0 Response to "மிதுன ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் எப்படி இருக்கு? "
Post a Comment