மஹாபாரதத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களில் முக்கிய பங்கு வகிப்பவள் அம்பை. காசி ராஜனின் மூத்த மகளாக, ஒரு ராஜகுமாரியாக மட்டுமே நமக்கு அறிமுகமாகிறது அம்பையின் பாத்திரம்.
பின்பு மஹாபாரத வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
அந்த இடத்திற்கு அப்பெண் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை.
வாழ்வில் சில நேரங்களில் புகழை விட, கொண்டாடப்படுதலை விட நிம்மதியும் மன அமைதியுமே மேலானது.
அதை உணரும் போது அதற்காக நாம் அதிக விலை கொடுத்திருப்போம். இதிகாசப் பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
அம்பை காசி ராஜனின் மூத்த புதல்வி. அவளுக்கு அம்பிகா, அம்பாலிகா என்ற இரு இளைய சகோதரிகள் உண்டு.
காசி ராஜன் தன் பெண்கள் மூவரும் பருவ வயதை அடைந்ததும் தகுந்த மணமகன்களைத் தேடி மணம் முடிக்க விரும்பினார்.
அந்தக் கால வழக்கப்படி மூன்று ராஜ குமாரிகளுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்கிறார்.
பல நாடுகளிலிருந்தும் எண்ணற்ற ராஜகுமாரர்கள், இந்த மூன்று ராஜகுமாரிகளையும் தங்கள் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நிரூபித்து மணம் புரிந்து கொள்ள ஆவலாக வீற்றிருந்தனர்.
மூத்தவளான அம்பைக்கு சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் ஈர்ப்பு இருந்தது.
அவனும் அவளை விரும்பினான்.
சுயம்வரத்தில் அவனுக்கே தன் மாலையை இடுவது என அம்பை முடிவு செய்திருந்தாள்.
மனதில் இருக்கும் தன் காதலன் சபையில் இருக்க, அம்பை எப்போதையும் விட அன்று வெகு சிறப்பாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
மனம் முழுவதும் கற்பனைகள் பொங்கியது.
கண்கள் மின்ன அவனை சபையில் காணப்போகும் நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
சபைக்கு வந்ததுமே கண்கள் சால்வனைத் தேடின.
கூடவே மனதில் அவன் தோள்களில் இன்று என் மாலை தழுவும். அடுத்து நான் தழுவுவேன் என்ற நினைப்பு வந்ததும் பெண்ணுக்கே உரிய நாணம் வந்து அப்பிக் கொண்டது. கன்னம் சிவந்து தலை குனிந்தாள்.
அதே சமயம் பீஷ்மர் தன் இளைய சகோதரன் விசித்திர வீரியனுக்காக பெண் தேடிக் கொண்டிருந்தார்.
காசி ராஜன் தன் மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து அரசவைக்கு தானும் சென்றார். அரசவையில் வீற்றிருந்த மன்னர்கள் சிலர் பீஷ்மரது புகழையும் வீரத்தையும் கருதி விலகி வழிவிட்டனர்.
அங்கு அவர் வந்த நோக்கத்தை அறியாமல் மற்ற அரச குமாரர்கள் கிழவனுக்கு இந்த வயதில் வந்த ஆசையைப் பார். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை போலுள்ளதே. பிரம்மச்சரிய விரதம் முடித்துவிட்டாரோ? என கேலி பேசிச் சிரித்தனர்.
சினம் கொண்ட பீஷ்மர் காசி ராஜனிடம், உன் மகள்களை என் நாட்டு மருமகள்கள் ஆக்கிக் கொள்ள அழைத்துப் போகிறேன் என்று கூறி மூன்று ராஜ குமாரிகளையும் தன் தேரில் பலவந்தமாக ஏற்றிச் சென்றார்.
தடுக்க வந்த மன்னர்கள் எல்லாம் அவரை முறியடிக்க முடியாமல் சிதறி ஓடினர்.
அம்பையின் காதலன் சௌபல நாட்டு மன்னன் சால்வன் தன் காதலியை பீஷ்மரிடம் இருந்து காக்க கடைசி வரை போராடினான். ஆனால் அவனாலும் பீஷ்மரை வெல்ல முடியவில்லை.
சால்வன் பீஷ்மருடன் தனக்காக போராடியதைக் கண்டு அவள் மனம் பெருமிதத்தில் விம்மியது. யாராலும் தோற்கடிக்க முடியாத, வீர புருஷர் பீஷ்மரையே எதிர்த்துப் போராடும் அவனது தன்னம்பிக்கையை கண்டு வியந்தாள்.
அதற்கும் மேலாக அவன் தன் மேல் கொண்டுள்ள காதலையும் எண்ணி உருகினாள்.
தன்னைக் காத்து தன்னுடன் கூட்டிச் சென்றுவிடுவான் சால்வன் என்று மனமார நம்பினாள். கடைசி வரை போராடிய சால்வனால் பீஷ்மரை முறியடிக்க முடியவில்லை. தடுமாற ஆரம்பித்தான். மனம் பதை பதைக்க தான் கண்ட கனவெல்லாம் புகை போல கண் எதிரிலேயே கலைவதைக் கண்டாள் அம்பை.
கடைசியில் சால்வன் பீஷ்மரை போராட்டத்தில் எதிர் கொள்ள முடியாமல் தன் நாடு திரும்பினான்.
சுயம்வர மாலையுடன் சபையில் காத்திருந்த பருவ வயது ராஜகுமாரிக்கு சற்றும் எதிர்பாராத இத்திருப்பம் அவள் இதயத்தை நடுங்கச் செய்வதாய் இருந்தது.
வேறு வழியின்றி பீஷ்மரோடு அஸ்தினாபுரம் சென்றாள். வழி எங்கும் பலவாராக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
இதை சபையில் அவள் நின்றிருந்த தோற்றம் காட்டியது.
மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்....
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 

0 Comments