அசல் சான்றிதழ் காட்டாவிட்டால் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்து, அசல் சான்றிதழ்கள் காட்டாதவர்களின் பெயர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெறாது; கவுன்சிலிங்கிலும் பங்கேற்க முடியாது&' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:

இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை சார்பில் அனுப்பப்படும், மொபைல்போன், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ, மெயில்களை ஒவ்வொரு மாணவரும் அவ்வப்போது பார்க்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட உதவி மையத்திற்கு வர வேண்டும். வீட்டில் இருந்து புறப்படும் போதே, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள, சான்றிதழ்களை ஆய்வு செய்து எடுத்து வர வேண்டும்

தவிர்க்க முடியாத காரணங்களால், சான்றிதழ் சரி பார்ப்புக்கு, குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாதவர்கள், அதே நாளில், ஏதாவது ஒரு நேரத்திற்குள் வந்து விட வேண்டும்.

அதிலும், வர முடியாதவர்கள், எந்த மாவட்டத்தினராக இருந்தாலும், வரும், 17ம் தேதி, சென்னை அண்ணா பல்கலை உதவி மையத்திற்கு வர வேண்டும்.

கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, ஒதுக்கப்பட்ட நேரத்தில் வருவது, மாணவர்களின் கவுன்சிலிங் பணியை எளிதாக்கும்

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, ஆன்லைனில் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதில், புகைப்படம் ஒட்டி எடுத்து வர வேண்டும்.

சான்றிதழ்களின் நகல் மட்டுமின்றி, அசல் சான்றிதழையும் கட்டாயம் எடுத்து வரவேண்டும். அசல் சான்றிதழ் காட்டாதவர்களின் பெயர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெறாது. தரவரிசையில் இடம் பெறாவிட்டால், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது

வேறு கல்லுாரிகளில் சேர்ந்து, அங்கு சான்றிதழ்களை அளித்தவர்கள், அந்த கல்வி நிறுவன முதல்வரிடம் இருந்து, சான்றிதழ் அங்கு இருப்பதற்கான, &'போனபைட்&' என்ற, அத்தாட்சி சான்றிதழ் வாங்கி வர வேண்டும்.

இறுதியில், கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கிய பின், சான்றிதழ்களை முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே, கல்லுாரிகளில் சேர முடியும்.இவ்வாறு அவர் கூறினார். கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, tnea2018@annauniv.edu என்ற, இ - மெயில் முகவரிக்கு கடிதம் அனுப்பலாம். மேலும், 044 - 2235 9901 என்ற எண்ணில் இருந்து, இறுதியில், 20ம் வரிசை வரையில் உள்ள எண்களில், தொடர்பு கொள்ளலாம்.