சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் கொச்சி மாணவி உள்ளிட்ட 4 பேர் முதலிடம்: 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தனர்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வில், கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த மாணவி உள்ளிட்ட 4 பேர் முதலாவதாக வந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு மாறாக, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே செவ்வாய்க்கிழமை காலையில் வெளியிடப்பட்டன.

ஹரியாணா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த பிரஹார் மிட்டல், உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னூரைச் சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லியைச் சேர்ந்த நந்தினி கார்க், கொச்சியைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி ஆகிய 4 பேர் முதலிடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் 4 பேரும், 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

2-ஆவது இடத்தை 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 3-ஆவதாக 14 மாணவர்கள் வந்துள்ளனர். அவர்கள் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த தேர்ச்சி 86.70 சதவீதம் ஆகும். மாணவர்கள் 85.32 சதவீதமும், மாணவிகள் 88.67 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வைப் போல, 10ஆம் வகுப்புத் தேர்விலும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மண்டல அளவில், திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவீத தேர்ச்சி பெற்று முதலாவதாக உள்ளது. சென்னை மண்டலம் 97.37 சதவீத தேர்ச்சியுடன் 2ஆவது இடத்தையும், அஜ்மீர் மண்டலம் 91.86 சதவீத தேர்ச்சியுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தன. தில்லி மண்டலம் 78.62 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
1,31,493 பேர் 90 சதவீதம் மற்றும் அதற்கு அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 27,426 பேர் 95 சதவீதம் மற்றும் அதற்கு அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் 92.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் குருகிராமைச் சேர்ந்த அனுஷ்கா பாண்டா, காஜியாபாதைச் சேர்ந்த சானியா காந்தி ஆகியோர் 500க்கு 489 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தனர். ஒடிஸாவைச் சேர்ந்த சோம்யா தீப் பிரதான் 484 மதிப்பெண்களுடன் 2ஆவதாக வந்துள்ளார்.

135 மாற்றுத் திறனாளி மாணவர்கள், 90 சதவீதம் மற்றும் அதற்கு அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 21 பேர், 95 சதவீதம் மற்றும் அதற்கு அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு சிசிஇ மதிப்பீட்டுக்குப் பதிலாக மீண்டும் தேர்வு நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டபிறகு நடைபெற்ற முதல் தேர்வு இதுவாகும். இத்தேர்வில் மொத்தம் 16 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வின்போது, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக செய்திகள் வெளியாகி இந்தாண்டு சர்ச்சை ஏற்பட்டது. எனினும், மாணவர்கள் நலன் கருதி மறுதேர்வு நடத்தும் முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுக்கவில்லை.