சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 97.37 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாமிடம்



சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை செல்லிடப்பேசியில் குறுந்தகவல் மூலம் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சென்னை மாணவ, மாணவியர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மண்டலம் 97.37 சதவீத தேர்ச்சியைப் பெற்று மண்டல அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மார்ச் 5-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 16,38, 428 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் திருவனந்தபுரம் (99.60), சென்னை (97.37), அஜ்மீர் (91.86) ஆகிய மூன்று மண்டலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேச பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 2,662 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 15 மாணவர்கள், 83 ஆயிரத்து 818 மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 93,833 பேர் தேர்வெழுதினர். இதில் மாணவர்களில் 96.8 சதவீதமும் (1,06,504), மாணவிகளில் 98.1 சதவீதமும் (82,225) தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.37 ஆகும்.

சென்னை மண்டலத்தில் தேர்வெழுதிய மாணவர்களில் 95 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் 5,737 மாணவர்களும், 90 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் 26,670 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
4 பாடங்களில் 100-க்கு 100: சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் தரணி கோவிந்தசாமி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

பாட வாரியாக தரணி பெற்ற மதிப்பெண்கள்:- ஆங்கிலம்- 97, பிரெஞ்சு- 100, கணிதம்- 100, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 100. ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
அதே போன்று சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்பிஓஏ பள்ளி மாணவி ரித்து அலிஸ் செரியன் 493 மதிப்பெண்களையும், சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த மாணவர் கிஷோர் ஞானேஸ்வர் 492 மதிப்பெண்களையும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.