சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்து செல்கின்றனர். இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பிறப்பித்த உத்தரவு: ''குழந்தைகளின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. ஒருபோதும் கல்வி அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் குறைந்தபட்ச தூங்கும் நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.
போதிய தூக்கம் இல்லாமல் போனால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பென்சில்கூட கொடுக்கக் கூடாது. மன அழுத்தம் இல்லாமல் உற்சகமான கற்றல் சூழலில் படிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அதிகமான புத்தகங்களை கொடுக்கக்கூடாது, அவர்கள் பொதி சுமப்பவர்கள் அல்ல. இது குறித்து சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் பறக்கும் படையை அமைத்து வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதன் விவரங்களை மத்திய அரசு 4 வார காலத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.