அமெரிக்காவில் இளநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள இந்திய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி எம். ஜோசப் பாம்பர் கூறினார். மாணவர் விசா பெற இடைத் தரகர்களை நம்பவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
2017 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்போது அமெரிக்காவில் 1.8 லட்சம் இந்தியர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இளநிலை பட்டப் படிப்புகளில் சேர இந்திய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இளநிலை பட்டப் படிப்பின்போது, ஆராய்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பில் அமெரிக்கா தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.