நாடு முழுவதும் மே 6 -ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 14,602 பேர் இந்தத் தேர்வை எழுதினர். இவர்களில் 24,720 பேர் தமிழ் வினாத்தாளைப் பெற்று தேர்வெழுதினர். அதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த விவரத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 195 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 173 பேர், நாகப்பட்டினத்தில் 85 பேர், விருதுநகர் மாவட்டத்தில் 70 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது அரசுப் பயிற்சி மையங்களில் பயின்று, இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களையும் பள்ளிக் கல்வித் துறை தொகுத்து வருகிறது. அந்தப் பட்டியலிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாய்ப்பு குறைவு: தேர்வு முடிவின் அடிப்படையில், அனைத்துப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணாக 119, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 96 -ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அரசு மருத்துவ இடங்களைப் பெறுவதற்கு கடும் போட்டி இருக்கும். எனவே, அரசுப் பள்ளிகளில் படித்து குறைவான தேர்ச்சி மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.