நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் சேர்க்கை செல்லாது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 36 மாணவர்களின் சேர்க்கை செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த 2016- 2017 ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி கடந்த 2016-2017-இல் நிரப்பப்படாத 36 அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக் கொண்டது. ஆனால், ஒதுக்கீடு பெற்ற 36 மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த 36 மாணவர்களின் சேர்க்கை செல்லாது என அறிவித்தது. இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகமும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த 36 மாணவர்களின் சேர்க்கை சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவு செய்யப் பரிந்துரைத்தது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருந்த இடங்களை நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களைக் கொண்டு நிரப்பியது சட்டப்படி செல்லாது.
2016-2017-ஆம் கல்வியாண்டில் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க உச்ச நீதிமன்றத்தின் முன்அனுமதி தேவை. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் காலாவதியான இடங்கள் எனக் கருத்தில் கொள்ள முடியாது. அவை நிரப்பப்படாத இடங்களாகவே கருத்தில் கொள்ளப்படும். 

எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி உரிய அனுமதி பெறாமலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமலும் சேர்க்கப்பட்ட இந்த 36 மாணவர்களின் சேர்க்கையும் செல்லாது'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.