பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. மாணவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கலந்தாய்வு உதவி மையத்தில் ஆஜராகி இருக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,78,131 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது. கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதில் பங்கேற்க 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து, விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் மட்டும் மூன்று நாள்கள் கூடுதலாக ஜூன் 17 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவா்கள் என பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
மதியம் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு மதியம் 1.30 முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
மாணவா்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்துவிடவேண்டும்.
மாணவா்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவா் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதோடு, தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளா் குறியீட்டை பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவா்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.
அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: மாணவா்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும்.
அதோடு, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தோ்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும்.
தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரா் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த சான்றிதழ்கள் அனைத்தும் அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவா்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னா் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக்கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவா்களிடமே திருப்பியளிக்கப்பட்டுவிடும்.
ஏற்கெனவே வேறு படிப்புகளில் சோ்ந்தவா்கள் என்ன செய்வது?
இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சோ்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவா்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சிக் (போனஃபைடு) கடிதத்தையும், அந்த கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமா்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்கத் தேவையில்லை.
பங்கேற்க முடியாதவா்கள் என்ன செய்வது?
இவ்வாறு மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்டத் தேதியில் பங்கேற்க இயலாதபோது, கடைசி நாளான ஜூன் 14 ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலும் பங்கேற்க இயலாத மாணவா்கள், ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ்.
ஆன்-லைன் கலந்தாய்வு குறும்படம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவா்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தோ்வு செய்வது என்பன குறித்த குறும்படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.
அதோடு, ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிற்றேடு ஒன்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிற்றேடை மாணவா்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச்செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்