தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என நூலகர்களுக்கு பொது நூலகத் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக பொது நூலகத்துறையின் கீழுள்ள மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டில் மாவட்ட மைய நூலகம், நூலகம், கிளை நூலகம், பகுதி நேர நூலகம், மகளிர் குழந்தைகள் நூலகம், ஊர்ப்புற நூலகம், நடமாடும் நூலகம் என சுமார் 4,603 நூலகங்கள் உள்ளன.
இவற்றில் 7 லட்சத்து 28,694 உறுப்பினர்களும், ஒரு லட்சத்து 17,278 புரவலர்களும் உள்ளனர்.
வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் நூலக உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக அதிகரிக்கவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நூலகர்கள் அருகே உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்குச் சென்று நூலகம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நூலக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் மாணவர்களிடையே தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.
வார விடுமுறை நாள்களில் அதிகளவில் பள்ளி மாணவர்களை வரவழைக்க அனைத்து நூலகங்களிலும் வாரந்தோறும் பல்வேறு விதமான போட்டிகள், சிறப்புச் சொற்பொழிவுகளை வாசக வட்ட உறுப்பினர்களுடன் இணைந்து நடத்த வேண்டும். சிறப்பாகச் செயல்படும் நூலகர்களுக்கு அரசின் சார்பில் சிறந்த நூலகர் விருது வழங்கப்படும் என்றனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரையில் பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் நூலகங்கள் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கடந்த பிப்.15-ஆம் தேதி நடமாடும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் படிப்பதற்காக சிறுகதை, கட்டுரை, புதினம் என பல்வேறு பிரிவுகள் சார்ந்த நூல்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் வாகனங்களில் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.