ரேகை வைத்தால் தான் ரேஷன் : ஆகஸ்ட் முதல் அறிமுகம்


ரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்’ கருவியில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், உணவுத்துறை, தாமதம்செய்வதாக புகார் எழுந்துள்ளது

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், உணவு பொருட்கள் வினியோகத்தில் முறைகேடுகள் நடக்கின்றன.

இதனால், ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே,பொருட்கள் வாங்கும் வகையில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்களை வழங்க, உணவுத்துறை முடிவு செய்தது. இத்திட்டத்தை, ஜூன் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

அதற்கு, சிலர் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பயோமெட்ரிக் வாயிலாக, பொருட்களை வழங்கினால் மட்டுமே, குறைந்த விலையில், தேவையான அளவுக்கு, தொடர்ந்து அரிசி வழங்கப்படும் என்று, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதை, யாரும் தடுக்க முடியாது.

பயோமெட்ரிக் முறை, அதிக தொழில்நுட்பம் சார்ந்து உள்ளதால், அதுதொடர்பாக, நிபுணர்களுடன், பலமுறை ஆலோசனை நடத்த வேண்டி இருந்தது.

தற்போது, அந்த பணி முடிந்ததால், விரைவில், பயோமெட்ரிக் கருவிகள் வாங்குவதற்கான பணி துவங்கப்படும். ஆகஸ்ட் முதல், ரேஷனில், விரல் ரேகையை பதிவு செய்த பின் தான், பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.