தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்டபொது நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்களை கொள்முதல் செய்யுமாறு பள்ளிக்கல்வி துறை செயலர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சமீபகாலமாகவே, பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு திறன் படிப்படியாக குறைந்து வருகிறது.. பாடப்புத்தகங்களை தாண்டி, வேறு எந்தவிதமான புத்தகங்களையும் படிக்க முடியாமல் போய்விடுகிறது.. பெரும்பாலான பள்ளிகளில் நூலகங்கள் அமைந்துள்ளன என்றாலும், அந்த நூலகங்கள் அவ்வளவாக செயல்படுவதில்லை என்றே தெரிகிறது.


அதுமட்டுமல்ல, நூலகத்துக்கான வகுப்பை வேறு பாட ஆசிரியர் பயன்படுத்தும் நிலைமையும் தமிழகத்தில் ஆங்காங்கே நிலவி கொண்டுதான் இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால், பள்ளிப்பாடங்களை தவிர, வகுப்பறைக்கு வெளியே ஏராளமான அறிவுக்களஞ்சியங்கள் கொட்டிக்கிடக்கவே செய்கின்றன..

பள்ளி கல்வித்துறை: அதனால்தான் இதை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், தமிழக பள்ளி கல்வித்துறையும் அவ்வப்போது புதுபுது முயற்சிகளை முன்னெடுத்தும் வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், இளைய தலைமுறைகளின் அறிவுத்தாகத்தை, மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரால் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

அதுமட்டுமல்ல, உலகத்தரம் வாய்ந்த நூல்கள் பத்திரிகைகள் இதழ்கள் இடம்பெறும் என்றும், எந்திரவியல் மெய்நிகர் தோற்றம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த கண்காட்சிகள் இதில் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு: இந்நிலையில், நூலகங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்டபொது நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்களை கொள்முதல் செய்யுமாறு பள்ளிக்கல்வி துறை செயலர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

"நூல் கொள்முதல் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பொது நூலகங்களுக்கு நூல்கொள்முதல் செய்ய, பிரத்யேகமாக இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பம்: நூல் கொள்முதலுக்காக, அரசின் ஒப்புதல் பெற்று வல்லுநர்கள் அடங்கிய நூல் தேர்வு குழுவை பொது நூலக இயக்குநர் நியமிக்கவேண்டும். தேவையான துணை குழுக்களையும் அமைக்க வேண்டும். நூலகங்களில் பயன்படுத்துவதற்காக விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் பன்னாட்டு புத்தக தர குறியீட்டு எண் பெறப்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு குழு ஒவ்வொரு நூலுக்கும் அளிக்கும் மதிப்பெண் முறையில், சிறந்த நூல் எது என்ற பரிந்துரைகள் தொகுக்கப்பட வேண்டும். தேர்வு குழு உறுப்பினர்கள் ஏதேனும் நூல்எழுதியிருந்தால், அந்த நூலை பரிசீலிப்பதற்கான தேர்வில் அவர்கள் பங்கேற்க கூடாது.

தரமற்ற காகிதம்: நூல் தேர்வு குழு உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும். ஒருமுறை இக்குழுவில் இடம்பெற்றவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதில் இடம்பெற கூடாது. தரமற்ற காகிதத்தில் அச்சிடப்படும் நூல்கள் நிராகரிக்கப்படும். விலை குறியீட்டு எண், விலை வரம்பு நிர்ணயம் செய்யப்படுவதற்கான கணினி மென்பொருள் கணக்கீடுகள் உருவாக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.